நியூயோர்க் நகர அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அந்த நகரின் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உகாண்டாவில் பிறந்த மாம்டானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம், தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மாம்டானி முன்னாள் ஆளுநரும் சுயேச்சை வேட்பாளருமான எண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவா ஆகியோரை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.
நியூயோர்க் நகரின் உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி மற்றும் பொதுமக்களின் பொருளாதார சுமை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் அவர் நடத்திய பிரசாரம் பெரும் ஆதரவைப் பெற்றது.
மிக இளம் வயதிலேயே மேயராக பதவியேற்ற மாம்டானி தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நியூயோர்க் மேயராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.