பெண்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) கணினி குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது, சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பல ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கிய அவர், அவற்றின் ‘ரீச்’ மற்றும் ‘வியூஸ்’ எண்ணிக்கையை உயர்த்திய பிறகு, ஒவ்வொரு பக்கத்தையும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலைக்கு விற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பக்கத்திற்கும் 10,000 முதல் 20,000 வரை பின்தொடர்பவர்கள் (followers) இருந்ததாகவும், பக்கங்களை விற்பனை செய்யும்போது வாங்குபவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை சேர்த்து உரிமையை மாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் இந்த மோசடி நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு பெண் தன்னுடைய புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.