பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை திட்டமிட்டபடி நிறைவு செய்யுமாறு இலங்கை அணியிடம் ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை பணிப்புரை விடுத்துள்ளது.
வீரர்கள் மற்றும் பணிக்குழுவினரின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்த நிலையில் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த பணிப்புரையை மீறி நாடு திரும்பும் எந்த வீரர் அல்லது பணிக்குழு உறுப்பினருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களின் ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்படும் எனவும் சபை எச்சரித்துள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு அச்சத்தால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்த பல இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதனைத் தொடர்ந்து, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகள் நடத்தியதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய வீரர்கள் நாடு திரும்பினால் தொடரை தடையின்றி நிறைவு செய்ய மாற்று அணியை அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது.