2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) ஆரம்பமாகி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறவுள்ளது. வரவு செலவு சட்டமூலத்துக்கான இக் குழு நிலை விவாதம் வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை தொடரும்.
வரவு செலவுத் திட்டக் காலத்தில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து பிற அனைத்து நாட்களிலும் விவாதங்கள் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் வாசிப்புக்கான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்த இரண்டாவது வரவு–செலவுத் திட்டத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயல்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று வரை நடைபெற்றதுடன் நேற்று மாலை நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் வரவு–செலவுத் திட்டத்திற்கு 160 ஆதரவுக் குரல்கள் பதிவு செய்யப்பட, 42 பேர் எதிராக வாக்களித்தனர். மேலும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 வாக்குகளின் பெரும்பான்மை மூலம் நிறைவேறியது.