முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக உள்ள அனைத்து அரசியல் குழுக்களுடனும் கூட்டமைப்பாக செயல்பட்டு, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிவித்துள்ளது.
இச் சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றது. இதில், பல்வேறு எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, எதிர்கால அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர். அக்கலந்துரையாடலின் முடிவில், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெறும் நோக்கில் எதிர்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நலீன் பண்டார பங்கேற்றார். மேலும் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாமல் ராஜபக்ஸ (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன), நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி), அனுர பிரியதர்ஷன யாப்பா (பொதுஜன ஐக்கிய முன்னணி), பழனி திகாம்பரம் (தொழிலாளர் தேசிய சங்கம்), மனோ கணேசன் (ஜனநாயக மக்கள் முன்னணி), ஜீவன் தொண்டமான் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்), உதய கம்மன்பில (பிவிதுரு ஹெல உறுமயவ்) ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைப் பெறும் வகையிலான திட்டமிடலுக்காக, இக்கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று (15) சந்திக்கவுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.