கடும் மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அருகாமையில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியின் தாக்கத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்படும் மழையுடனான வானிலை மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக திணைக்களம் கூறுகிறது.
இரு மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கடும் மழை பொழியலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழை, பலத்த காற்று மற்றும் இடி மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.