(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை , அந்நூர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட N.K.M. மிஸ்வர் அவர்கள் 14.11.2025 அன்று தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.H.M. ரஸ்மி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு பல சாதனைகளுக்கு வழிகோலாக அமைந்த முன்னாள் அதிபர் ஏ.எம். அஸ்மி அவர்கள் கலந்து கொண்டு தனது பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைத்தார்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இவரைத் தேர்வு செய்ததுடன் அமைச்சின் செயலாளர் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
புதிய அதிபர் மிஸ்வர் அவர்கள் பல ஆண்டுகளாக கல்வி துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனுபவமிக்க கல்வியாளர். அக்கறைப்பற்று அஸ்-சிறாஜ் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் பலரும் பங்கேற்று புதிய அதிபருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்நூர் வித்தியாலய முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வித் தர உயர்விற்கும் முழு திறனுடன் செயல்படுவேன் என மிஸ்வர் அவர்கள் உறுதியளித்தார்.
அந்நூர் வித்தியாலயப் பகுதி மக்கள் மற்றும் பழைய மாணவர்கள் புதிய அதிபரின் நியமனத்தை வரவேற்றதுடன் அவரது தலைமையில் பாடசாலையின் கல்வி மேலும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

