(அக்கறைப்பற்று செய்தியாளர்)
அக்கரைப்பற்று கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று கடலில் மூழ்கிச் சென்ற நிலையில் அவரது உடல் இன்று அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரப் பகுதியில் மீட்கப்பட்டது.
நேற்று மதியம் அக்கறைப்பற்று கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவில் திடீரென ஏற்பட்ட பலத்த அலையால் ஒருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவத்துக்கு பின்னர் காணாமல் போன இளைஞனைத் தேடும் நடவடிக்கைகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டன.
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.எம். ரியாஸ் தலைமையில் தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது. இப்பணியில் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ் குழு, இலங்கை கடற்படை பாணம பிரிவு மற்றும் அல்-உஸ்வா உயிர் காப்புக் குழுவினரும் இணைந்து செயல்பட்டனர்.
இப்பகுதியில் சீரற்ற கால நிலை நிலவிவந்தாலும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் பின்பு இளைஞனின் உடல் இன்று சின்ன முகத்துவாரப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.