(பாலமுனை செய்தியாளர்)
2025 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சித்திரப் போட்டியில் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி மறக்கமுடியாத வரலாற்றை படைத்துள்ளது.
முதலாமவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.ஆர்.எப். மழ்ஹா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், இரண்டாமவர் தரம் 08ல் கல்வி கற்கும் மாணவி எம்.ஆர்.எப். ஹன்பத் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையைப் பெற்றிருப்பது அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்கும் பாலமுனை மண்ணுக்கும் மிகப்பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளதுடன் பாலமுனை மண்ணின் திறமையும், உழைப்பும், வளர்ச்சி சக்தியும் தேசிய அளவில் ஒலிக்கச் செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னால் அமைதியாக உழைத்தவர்களின் பங்களிப்பும் மறக்கமுடியாதவையாகும்.இம் மாணவிகளுக்கு காலத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்து தொடர்ந்து பயிற்றுவித்த சித்திரப் பாட ஆசிரியை ஐ.எப். முனஸபா அவர்களுக்கும் இணைப்பாடங்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து மாணவர்களை சாதனைகளுக்குத் திசைதிருப்பிய அல்–ஹிதாயாவின் முன்னாள் அதிபர் பி. முஹாஜிரீன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.