‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளர்களாக அடையாளம் காணப்பட்ட 43,703 பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லாததால் 2024 ஆம் ஆண்டில் அவர்களுக்கான நலன்கள் வழங்கப்படாமல் போனதாக ஒரு சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, இந்த குறைபாடு காரணமாக தகுதியுடையவர்கள் பெற வேண்டிய சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரச்சினையைச் சமாளிக்க 2025 ஜூன் மாத இறுதி வரையும் தேவையான தொழில்நுட்ப வசதி அல்லது முறையை உருவாக்கி செயல்படுத்த நலன்புரி நன்மைகள் சபை தவறியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
திட்ட விதிகளுக்கமைவாக தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் கணக்காய்வு அறிக்கை பரிந்துரைக்கிறது.
வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளர்களுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை விளக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வு அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.