Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி நகர சபைகளின் செயற்பாடுகள் உண்மையில் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 19, 2025

கல்முனை பிராந்தியத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Posted on November 26, 2025 by Admin | 120 Views

கல்முனை பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, கல்முனை பிராந்தியத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் பிரதான மற்றும் உள்ளக வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் பட்சத்தில், பிராந்தியத்தில் பாரியதொரு வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, தாழ்நிலங்களில் வசிப்போர் மற்றும் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக்காலச் சூழல் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் நீரினால் பரவும் ஏனைய தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருத்தல், தமது இருப்பிடத்தையும், சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுதல், சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைத் தவறாது பின்பற்றுதல், காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, அனர்த்த நிலைமைகளின் போது அரசாங்கம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் (வானிலை அவதான நிலையம்) ஆகியவற்றினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், அவ்வமைப்புகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறும் பிராந்திய பணிப்பாளர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.