Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 20, 2025

நாட்டின் பல மாகாணங்களுக்கு ஆபத்தான சிவப்பு எச்சரிக்கை 

Posted on November 27, 2025 by Admin | 133 Views

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை சூழ்நிலையை முன்னிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையும் கண்காணிப்பு காலமும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நவம்பர் 29 வரை பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள சிவப்பு எச்சரிக்கை இன்று (27) இரவு 10.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கிலிருந்து வட மேற்கு நோக்கி நகரும் குறைந்த அழுத்தப் பகுதியின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை தொடரக்கூடும். சில இடங்களில் மழை அளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டும் வாய்ப்பு உண்டு.

காற்று வீச்சும் அதிகரிக்கும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வேகத்திலான பலத்த காற்று வீசலாம். இடியுடன் கூடிய மழையின் போது இது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை உயரக்கூடும். தென்கிழக்கில் இருந்து வடகிழக்கு வரை உள்ள கடற்பகுதிகளில் காற்று வீச்சு மணிக்கு 60–70 கி.மீ. வரை அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கொழும்பு, புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட கரையோரங்களில் 2.5 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித் தொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உயரமான மற்றும் அபாயகரமான சரிவுகளில் வசிப்பவர்கள் விசேட அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க பின்பற்றுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.