(அபூ உமர்)
2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இதுவரை நியமனம் பெறாத ஆசிரியர்களுக்கும் பிரதமருக்குமிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றி இதுவரை நியமனம் பெறாத 1300 ஆசிரியர்கள் சார்பான பிரதிநிதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தெளிவுபடுத்தும் வகையிலும் தமக்கான நீதியினை பெற்றுத் தருமாறும் கோரி கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்களை சந்திக்கும் நிகழ்வானது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் 2025.11.26ம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்தின்போது அவர்கள் எதிர்கொண்ட அநீதிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வகை அநீதிகள் இடம்பெறாத வகையில் தேவையான நடைமுறைகள் அமுல்படுத்தப்படும் எனவும் ஆண்டுதோறும் போட்டிப் பரீட்சைகள் நடத்தி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பை, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். அப்துல் வாஸித், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

