விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆறு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் “அணை உடையும் அபாயம்” குறித்த செய்திகள் முழுவதும் பொய்யானவை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
விக்டோரியா மின்நிலையத்தின் பிரதம பொறியியலாளர் ஜீ.டி.ஐ. சாந்த தெரிவித்ததாவது:
விக்டோரியா நீர்த்தேக்கம் உடையும் அபாயம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை. மின்நிலையத்தில் மின்உற்பத்தி பணிகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும், தானும் தொழிலாளர்களும் அங்குள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, “களனி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள வெள்ளத் தடுப்பு அணை உடைய வாய்ப்பு உள்ளது” என்ற தகவலும் முற்றிலும் ஆதாரமற்றது என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய மோசமான காலநிலை சூழ்நிலையில் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால், உண்மையற்ற செய்திகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.