டித்வா புயலால் சேதமடைந்த ரன்தெம்பே–மஹியங்கனை மின்பரிமாற்ற அமைப்பைச் சீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07)க்குள் முடிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
புயலினால் ரன்தெம்பே–மஹியங்கனை 132 கிலோவோல்ட் மின்பரிமாற்ற பாதையில் உள்ள ஒரு மின்கோபுரம் முழுமையாக சேதமடைந்ததுடன் பல மின்கம்பிகளும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக மஹியங்கனை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
நிலையத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் வரை இலங்கை மின்சார சபை (CEB) அவசர நடவடிக்கை எடுத்து 33 கிலோவோல்ட் தற்காலிக இணைப்பின் மூலம் வைத்தியசாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் பொதுமக்களுக்கு சில மணி நேரங்கள் விட்டு விட்டு மின்சாரம் வழங்கும் முறை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
சீரமைப்பு பணிகளின் முன்னேற்றத்தைப் பரிசீலிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சம்பந்தப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன் இந்தப் பயணத்தின் போது மின்கோபுரம் முழுமையாக சேதமடைந்த நீர்மின் நிலையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.