சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பல பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் மாமிசம் மனித நுகர்வுக்காக சந்தையில் விற்பனைக்கு வருவதைத் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வார காலத்துக்கு மன்னார் மாவட்டத்தில் மாமிசத்தை விற்பனைக்காக சேமித்துவைப்பு மற்றும் விலங்குகளை அறுப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் மனித நுகர்வுக்காக விற்கப்படுகிறதா அல்லது கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்தகைய சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்கள் எதுவும் உள்ளதெனில், அந்தந்த பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரிடம் உடனடியாக அறிவிக்கவும். அவ்வாறு செய்ய இயலாதபட்சத்தில், 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அவசர உதவி எண் 1926-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.