Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

வெளிநாட்டில் மரணிக்கும் இலங்கையர்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் விசேட பிரிவினை ஏற்படுத்துங்கள்-உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

Posted on June 5, 2025 by Admin | 129 Views


(அபூ உமர்)

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மரணமடைந்தால் அவற்றுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் விசேட பிரிவு ஒன்றை உருவாக்கி, அதனை இயக்கக்கூடிய விசேட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தியுள்ளார்.

2025 ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் தூதரக நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் தாமதமின்றி அதிகாரபூர்வமாக பரிமாறப்பட வேண்டும் என எம்.பி. உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். பல நேரங்களில் விடுமுறைக் காலங்களில் மரணங்கள் நிகழ்ந்தால், வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பல பகுதிகளில் திருகோணமலை, யாழ்ப்பாணம், மாத்தறை, குருநாகல், கண்டி பகுதிகளில் இயங்கும் பிராந்திய கன்சியூலர் காரியாலயங்களில் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. கட்டட வசதிகள், கழிப்பறைகள், அமர்விடங்கள் என அடிப்படை சேவைகள் கூட இல்லாத நிலை காணப்படுவதையும் எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார். தூர இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள கன்சியூலர் காரியாலயம் கிழக்கு மாகாணம் மட்டுமின்றி, வட மற்றும் வடமத்திய மாகாண மக்களுக்கும் சேவையளிக்க வேண்டிய காரியாலயமாகும். இருப்பினும், வெளிநாட்டில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க மக்கள் திருகோணமலை காரியாலயத்தை அணுகினால், சில அதிகாரிகள் “கொழும்பில்தான் அதை செய்ய வேண்டும்” என அறிவுறுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.


திருகோணமலை பிராந்திய காரியாலயத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கி, அதனை செயற்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மற்ற பிராந்திய காரியாலயங்களுக்கும் தேவையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்,

குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.