(அபூ உமர்)
இயற்கையின் கோரத் தாண்டவத்தினால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை தங்களின் வேதனையாக உணர்ந்து அவர்களின் வாழ்க்கை மீண்டும் சீரடைய உதவுவதற்கு அட்டாளைச்சேனை மக்கள் முனைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த கட்ட உதவிகளை வழங்கும் மனிதநேய நோக்குடன் அட்டாளைச்சேனை அனர்த்த முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் மின்சாரத் தொழிலாளர்கள்(Electricians), குழாய் பொருத்துநர்கள்(Plumbers) உள்ளிட்ட சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்களைக் கொண்ட குழு நேற்று (12) அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பாதிக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், நீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளை மீண்டும் ஏற்படுத்தும் பணியில் தங்களை அர்ப்பணிக்கத் தயாரான இக்குழுவினர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றஊப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கல்கமுவ, கெலிஓயா பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் நெறிப்படுத்தலில் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சேவை பணிகளை இன்று(13) ஆரம்பித்துள்ளனர்.
இந்த மனிதநேய சேவைப் பயணத்தின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், குழுவின் தலைவர் ஓ.எல்.எம். றிஸ்வான் (அதிபர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சேவையாற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் வழங்கினர்.
இயற்கை அனர்த்தம் உருவாக்கிய காயங்களை மனிதநேயமும் ஒற்றுமையும் தான் குணப்படுத்தும் என்பதை உணர்த்தும் இந்த முயற்சி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் நம்பிக்கையாக மாறியுள்ளது.





