(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளைப் பகுதி மக்களுக்கு உதவுவதற்காக அட்டாளைச்சேனையிலிருந்து மனிதநேய உணர்வுடன் உதவ தன்னார்வக் குழுவினர் கடந்த 2025 டிசம்பர் 12 ஆம் திகதி கம்பளை நோக்கிப் பயணித்தனர்.
அக்குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவையாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஊர் திரும்புவதற்காக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக ஒரு இளைஞன் கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்(ETU) அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்ப கட்டத்தில் குறித்த இளைஞனுக்கு அவசர சத்திரசிகிச்சை அவசியமாகலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் விளைவாக அவரது உடல்நிலை படிப்படியாக சீரடைந்ததை அடுத்து தற்போது அவர் சாதாரண வார்டுக்கு(விடுதி) மாற்றப்பட்டுள்ளார். மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து அவதானித்த பின்னர் தேவையெனில் மேலதிக சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவுடன் உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று இளைஞனின் உடல்நிலை குறித்து வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இளைஞனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்த நிலையில் இவ் இளைஞனுக்கு ஏற்பட்ட இந்நிலை பலரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல்நிலை விரைவில் முழுமையாக சீரடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!
தன் சொந்த நலனைப் புறக்கணித்து அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ முன்வந்த இளைஞனின் மனிதநேயமான சேவை மனப்பாங்கு சமூகத்தின் பல தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.