உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தள செயலிகளில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் அன்றாட தொடர்புகளுக்கு அத்தியாவசிய செயலியாக வாட்ஸ்அப் மாறியுள்ள நிலையில் பயனர்களை ஈர்க்க தொடர்ந்து புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியாக மட்டுமே இருந்த வாட்ஸ்அப் காலப்போக்கில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி வளர்ச்சி பெற்றுள்ளது. ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வு, பாடல்களை ஸ்டேடஸாக வைக்கும் வசதி உள்ளிட்ட பல அப்டேட்கள் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமாகின.
சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்வதற்காகவும் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வாட்ஸ்அப் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய அப்டேட்டை தற்போது வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறும் போது குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ளமுடியாத படி அமைதியாக வெளியேறும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு குழுவில் இருந்து ஒருவர் வெளியேறினால் அந்த தகவல் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரிந்துவிடும். புதிய அப்டேட்டின் மூலம் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.