Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில்

Posted on December 17, 2025 by Admin | 194 Views

டிட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை நிலைமைகளினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தெமோதர பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ஒன்பது வளைவுப் பாலம்’ சுற்றுவட்டாரம் தற்போது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் புதிய சுற்றுலா வலையமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டு வந்த சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே தெரிவித்துள்ளார்.

ஒன்பது வளைவுப் பாலத்தை மின் ஒளியூட்டல் மூலம் அழகுபடுத்துவதுடன் புதிய சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இத்திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் மற்றும் கட்டிடச் சேதங்கள் காரணமாக நிர்மாணப் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, பணிகளை விரைவுபடுத்தி 2026ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக இந்த சுற்றுலா திட்டத்தை திறந்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.