Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு

Posted on December 20, 2025 by Admin | 166 Views

சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளின் பேரிலும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ள விற்பனை நிலையங்களில் வெள்ளிக்கிழமை (19) சுகாதாரப் பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகப் பழுதடைந்த ஐஸ்கிரீம்களை, உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாகக் கூறி அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதே ஐஸ்கிரீம்களை மோசடியான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நுகர்விற்கு முற்றிலும் உதவாத நிலையில் காணப்பட்ட அனைத்து ஐஸ்கிரீம்களும் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக அழிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டதாகக் கூறி, சம்மாந்துறையில் இயங்கும் அரச சார்பு விற்பனை நிலையம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குறித்த நிலையத்தின் பொறுப்பாளர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இன்றி சுகாதாரப் பிரிவு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.