Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கடவுளின் மனதை மாற்றி உலக அழிவை ஒத்தி வைத்து மக்களை நடுத்தெருவில் விட்ட விநோத மதபோதகர்

Posted on December 26, 2025 by Admin | 145 Views

நேற்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப்போவதாக அறிவித்து மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த மதபோதகர் எபோ நோவா (Ebo Noah) தற்போது “உலக அழிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனக் கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

“கடவுள் உலகை அழிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் நான் அவரிடம் மண்டியிட்டு அழுது மன்றாடினேன். மனிதகுலத்திற்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டினேன். எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கடவுள் தனது கோபத்தைத் தணித்து, உலக அழிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்” என்றார்.

போதகரின் இந்த திடீர் மாற்றமான அறிவிப்பு, அவரை நம்பி செயல்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. உலக அழிவு உறுதியென நம்பிய பலர் தங்கள் வீடுகள், நிலங்கள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, போதகர் அமைத்திருந்த ‘பாதுகாப்பு கப்பல்’ என அழைக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருந்தனர்.

தற்போது உலகம் அழியாது என்றும், அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டதால், சொத்துகளை இழந்த மக்கள் எங்கு செல்லுவது என்று தெரியாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் திட்டமிட்ட முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே என பகுத்தறிவாளர்களும், பிற மதத் தலைவர்களும் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளனர். உலகம் அழியாது என்பது தெளிவான பின்னர் பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கவே “கடவுள் மனமாறினார்” என்ற புதிய கதையை போதகர் கூறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையே சொத்துகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் போதகருக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கத் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.