Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

சதொச லொறியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது விசாரணை

Posted on January 4, 2026 by Admin | 106 Views

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாளை (05) முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அவர் முன்னிலையாகத் தவறினால் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் ஒரு பகுதியாக அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானதாக கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியதாகும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்திக ரத்னமலல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.