ஈரானில் தொடரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த உதவி அமெரிக்கா நேரடியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையைக் குறிக்கிறதா என்பது குறித்து ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட பதிவில், “ஈரானிய தேசபக்தர்களே, போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுங்கள். உங்கள் நிறுவனங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். உதவி கிடைத்துக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தண்டனை நடவடிக்கைகளில் இராணுவ நடவடிக்கையும் ஒரு மாற்று வழியாக பரிசீலிக்கப்படலாம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஈரானில் தற்போது மிகக் கடுமையான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈரான் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின் படி, இப்போராட்டங்களால் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த நாட்டின் தயாரிப்புகளுக்கும் 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று இரவு அறிவித்தார்.
உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக ஈரான் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.