நாட்டிற்கு தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜைகளை உருவாக்கும் கல்வி முறைமை எந்த நிலையிலும் இடைநிறுத்தப்படாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதிப்படுத்தினார்.
சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்கு கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் பொறுப்பேற்ற தருணத்திலேயே மாற்றம் அவசியமான முக்கிய துறையாக கல்வித்துறை அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது சில தரப்புகளின் எதிர்ப்புகள் எழுவது இயல்பானதென சுட்டிக்காட்டியதுடன் புதிய கல்வி மறுசீரமைப்பு சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்புக்குள் தான் நடைமுறைப்படுத்தப்படும் என வலியுறுத்தினார்.
பிழைகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்திக்கொண்டு முன்னேறும் புதிய கல்வி முறைமையின் கீழ், சிறுவர்களுக்கு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் போது சிறுவர் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறினார்.
இந்த கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக தொழிற்கல்விக்காக அதிகளவான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், பாடசாலைகளுக்கு இடையிலான டிஜிட்டல் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நீக்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தரம் 6 கல்வி மறுசீரமைப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்தியதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
கல்வி மாற்றத்தை நோக்கி கொண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் மிக முக்கியமானது எனவும் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.