Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கர்ப்ப காலத்தில் பெரசிட்டமோல் பாதுகாப்பானதா? புதிய ஆய்வின் முடிவு

Posted on January 17, 2026 by Admin | 117 Views

கர்ப்ப காலத்தில் பெரசிட்டமோல் (Paracetamol) மருந்தை உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அது குழந்தைகளுக்கு ஓட்டிசம் அல்லது ADHD போன்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் புதிய விரிவான மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘தி லான்செட்’ (The Lancet) என்ற உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் லட்சக்கணக்கான கர்ப்பிணிப் பெண்களை உள்ளடக்கிய 43 முக்கியமான ஆய்வுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. பெரசிட்டமோல் பயன்படுத்துவதுக்கும் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

லண்டனின் செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான ஆய்வு குழு கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது கடுமையான வலியை கட்டுப்படுத்த பெரசிட்டமோல் பயன்படுத்துவது பாதுகாப்பானது என உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தேவையான போது மருந்து எடுக்காமல் தவிர்ப்பது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 செப்டம்பரில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் நேரடி மறுப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் ‘அசிட்டமினோஃபென்’ என அழைக்கப்படும் பெரசிட்டமோல் ஓட்டிசம் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறி கர்ப்பிணிப் பெண்கள் அதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அந்த கருத்து உலகளாவிய மருத்துவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதுகுறித்து எச்சரிக்கையுடன் அணுகுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும் அசிட்டமினோஃபென் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் இடையிலான நேரடி தொடர்பு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

“கர்ப்பிணிப் பெண்கள் தேவையற்ற பயமும் மன அழுத்தமும் அடைய வேண்டிய அவசியமில்லை. தலைவலி அல்லது காய்ச்சலுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற அச்சத்திற்கு இந்த ஆய்வு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்,” என்று கிங்ஸ் கல்லூரி லண்டன் பேராசிரியர் கிரைன் மெக்அலோனன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முக்கிய மருத்துவ அமைப்புகள் பெரசிட்டமோல் பாதுகாப்பானது என்றே வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. இந்த புதிய ஆய்வு அந்த நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது