சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை நிரந்தர சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளைப் பெறாத சுமார் 5 இலட்சம் சாரதிகளுக்கான அச்சிடப்பட்ட அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகளில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேவையான அச்சிடும் அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அச்சிடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.