Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல்

Posted on January 20, 2026 by Admin | 126 Views

நாட்டில் நிலவும் குளிர்ச்சியான மற்றும் வறண்ட வானிலை காரணமாக சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இவ்வகை வைரஸ் தொற்றுகள் அதிகளவில் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய குளிர் மற்றும் வறண்ட காலநிலை சுவாசத் தொகுதியின் மேற்பகுதியை தாக்கும் வைரஸ்கள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமாக அமைவதாகவும் முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி வயதுடைய சிறுவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் நோய்களால் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான அறிகுறிகள் மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்தாலோ, அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் காற்றுத் தரம் வழமை நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.