Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Jan 31, 2026

இலங்கையிடம் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து அணி

Posted on January 22, 2026 by Admin | 140 Views

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை–இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 271 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி கட்டத்தில் களம் புகுந்த துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 25 ஓட்டங்களைச் சேர்த்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆதில் ரஷீத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 272 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்தில் நல்ல அடித்தளம் அமைந்தது. இரண்டாவது விக்கட்டுக்காக பென் டக்கெட் (62) மற்றும் ஜோ ரூட் (61) இணைந்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தினர்.

எனினும் இலங்கை அணியின் கட்டுப்பாடான மற்றும் தொடர்ச்சியான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் படிப்படியாக வீழ்ந்தன. இறுதி நேரத்தில் ஜேமி ஓவர்டன் சில அதிரடி அடிகளை வெளிப்படுத்தினாலும் அணியை வெற்றிக்குத் தூக்கிச் செல்ல முடியவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களுக்கே கட்டுப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.