12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசி பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவு முன்பே அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் இணையாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அந்த அனுபவங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை கையாள்வதற்காக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் சமீபத்தில் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன. மேலும், அதன் நேரடி அதிகார எல்லைக்குள் வராத 1,941 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
கடந்த ஆண்டு பெறப்பட்ட முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், 231 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள், 79 இளம் வயதுக் கர்ப்ப சம்பவங்கள், 3 கருக்கலைப்பு சம்பவங்கள், 9 சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வல்லுறவு முறைப்பாடுகள், 150 சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறை சம்பவங்கள் மற்றும் 20 தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோர் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் கடந்த ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.