Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Jan 31, 2026

மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம்

Posted on January 30, 2026 by Admin | 143 Views

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பான விவகாரம் இன்று(30) நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது கூட்டம் முழுவதும் கடும் வாக்குவாதங்களாலும் கருத்து மோதல்களாலும் சூடுபிடித்தது.

இவ்வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வீடுகள் வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தற்போது தடையில்லை என DCC-யின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தெரிவித்ததையடுத்து கூட்டத்தில் இருந்த சில அரசியல் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர முதல்வரும், முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா ஆகியோர் தங்களது எதிர்ப்புக் கருத்துகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சில நேரங்களில் கடும் சொல் மோதல்களும், குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றன.

இச்சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர்,
“நுரைச்சோலை வீட்டு திட்டத்திற்கு தற்போதுள்ள ஒரே நிரந்தர தீர்வு ,பாராளுமன்றத்தில் ஒரு விசேட சட்டத்தை கொண்டு வருவதே ஆகும். அந்தச் சட்டத்தின் ஊடாக்சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை வீடுகள் பெறாத உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதன்மை வழங்கப்பட வேண்டும். அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு மட்டுமே இந்த வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்நிலையில் நுரைச்சோலை வீட்டு திட்டம் தொடர்பான இறுதி முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.