கொழும்பில் நடைபெற்ற நக்பா தின நிகழ்வை அடுத்து, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
கேள்வி-
“பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டுச்சேர மாட்டோம்” என சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச முன்னர் கூறியிருந்த நிலையில், தற்போது ஆட்சி அமைக்கும் பொருட்டு அவர்களுடன் இணைவது சரியானதா என கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம்,
“அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் இல்லை. சர்வாதிகாரப் போக்கில் நாட்டை இழுக்க முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை காக்கும் வகையில் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தேர்தல் முறையைத் தமக்குப் பயன்படும் வகையில் மாற்ற முடியுமென எண்ணும் அரசியல் பார்வை எதிர்மறையானது. இது தொடர்பில் எமது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கேள்வி,
அப்படி என்றால் உங்களுக்கு கம்மன்பில போன்றோர் இருக்கும் மேடையில் இருக்க முடியுமா?
இதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம்,
“இது கம்மன்பில அல்லது யாரையும் நேரடியாக குறிவைக்கும் நிலைபாடு அல்ல. எமது கூட்டணிக்குள் சவால்கள் எழும்பின் அதற்கான தீர்வுகள் குறித்து நாம் ஆலோசித்து, தேவையான ஆதரவுகளை வழங்குவோம். அதேபோல், ஆளும் கட்சி சில சபைகளில் எம்மிடம் ஆதரவை கோரினால், அது குறித்தும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். எனினும், எமது முக்கிய கூட்டணியான சமகி ஜன பலவேகய கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” என்றார்.
இத்துடன், முஸ்லிம் காங்கிரஸுக்கு 10 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக தேவையான ஆதரவை பிற கட்சிகளிடம் எதிர்பார்க்கும் நிலை தற்போது உள்ள தேர்தல் முறையின் தவறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.