மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் மோசமடைந்துள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட அணு ஆயுததளங்களை குறிவைத்த தாக்குதல்களுக்குப் பின்னர், சவுதி அரேபியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான அறிக்கையில், “ஈரானின் இறையாண்மையை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்க முடியாதது” என்று சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது. , கடந்த ஜூன் 13, 2025 அன்று வெளியான அறிக்கையிலும், இந்த தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும், நிலவும் பதற்றத்தை உடனடியாக குறைக்கவேண்டும் என்றே சவுதி அரசு அழைப்பு விடுத்தது.
வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிராந்திய ஸ்திரத்தன்மை பாதுகாக்கும் முயற்சிகள் இப்போது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “எந்தவொரு மோதலும் மேலும் தீவிரமடையாமல் தவிர்க்கப்பட வேண்டும்,” எனும் எச்சரிக்கையும் இதில் இடம்பெற்றுள்ளது.
அணு ஆயுதங்களை குறிவைத்த அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், பிராந்தியத்தில் பெரும் உள்நிலை மற்றும் பன்னாட்டு பதற்றத்திற்குத் தூண்டிவைத்துள்ளன. இந்த சூழ்நிலையில், சர்வதேச சமூகம் விரைவாக மற்றும் தீவிரமாக இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்துகிறது.
“மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பும், நிலைத்த அமைதியும் அவசியம். அதற்கான அமைதியான தீர்வே தற்போதைய தேவை” என சவுதி அரசு தனது அறிக்கையின் இறுதியில் தெரிவித்துள்ளது.