Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

Posted on June 22, 2025 by Admin | 214 Views

பயங்கரவாத தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்த கடிதம், குறிப்பாக மொஹமட் ருஸ்டி என்ற இளைஞரின் கைது மற்றும் அவரது உரிமை மீறல்களை மையமாகக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவினால், குற்றத்திற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், ருஸ்டி 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது.

மேலும், “மதரீதியான கடும்போக்காளர்” எனும் விம்பத்தினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும், விடுவிக்கப்பட்ட பின்னரிலும் அவரை வாரந்தோறும் முன்னிலையாக அழைப்பதும், பயணக் கட்டுப்பாடுகளும் அடங்கிய கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதையும் ஆணைக்குழு கண்டித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், அவரது அடிப்படை மனித உரிமைகளுக்கு விரோதமானவை என ஆணைக்குழு தெரிவிக்கிறது. ருஸ்டியின் வழக்கு, PTA சட்டத்தின் ஒடுக்குமுறை போக்கை நேரடியாக எடுத்துக்காட்டுவதாகவும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் இச்சட்டத்தை தங்களுக்கே விருப்பமான விதத்தில் பயன்படுத்தும் ஆபத்தையும் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் மூலம்:

  • குற்றம் குறித்து தெளிவான வரையறைகள் இல்லாமை,
  • விசாரணையின்றி நீண்டகால தடுப்புக்காவல்,
  • நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமை,
  • பிணை நிராகரிப்பு,
  • காவல் வாக்குமூலங்கள் சாட்சியாக ஏற்கப்படும் நடைமுறை

இவை அனைத்தும் சட்டத்தின் முக்கியமான குறைகளாகும் என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சட்டம் நீதி மற்றும் மனித உரிமை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை முற்றிலும் மீறுவதாகவும், அதனை முழுமையாக நீக்கவேண்டும் என ஆணைக்குழு தனது கடிதத்தில் நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.