(அபூ உமர்)
கடந்த கால யுத்த நிலைமையினையும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத கொடூரமான செயற்பாடுகளையும் எதிர்கொண்ட வரலாற்றை மறந்து அநுர அலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் தலைவர்களை பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்யும் அரசியல் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என 2025.06.20ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்திய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்….
கோத்தபாய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் நமது நாட்டில் இனவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டன. கண்டி தலதாமாளிகையில் 1000 பௌத்த மதத் தலைவர்கள் ஒன்று கூடி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செய்து கண்டியில் இருந்து கொழும்பு வரை வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டனர்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெரும் நோக்கில் சகல முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ். றஊப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஒன்று கூடி தங்களின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர். இந்த நிகழ்வு இலங்கை அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாக பதிந்துள்ளது.
இனவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நன்கு திட்டமிடப்பட்ட இனவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அன்று முஸ்லிம் சமூகத்திடம் இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எமது முஸ்லிம் தலைவர்கள் பாவித்தனர் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் அரசியல் வரலாற்றை பின் நோக்கும் போது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நமது சமூகத் தலைவர்கள் அவர்களால் முடிந்தளவு சமூத்திற்காக பணிபுரிந்துள்ளனர் என்பதே யதார்த்தமான உண்மையாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்காக எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை என ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதை கேட்கும் போது மனம் வேதனை அடைகிறது.
நமது நாட்டில் மூவின மக்களும் கொடூர யுத்ததினால் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு வந்துள்ள நாங்கள் கடந்த காலங்களில் எங்களுக்கான நிம்மதிகளையும், உரிமைகளையும் இழந்துள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஆளுமையில் நம்பிக்கை வைத்து நமது நாட்டு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். மக்கள் ஆணையை வழங்கியதனால் தான் 159 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் கிடைத்தது. ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.