நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் திரு துசித ஹல்லொலுவ உட்பட மூவரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது வாகனத்தில் இருந்த ஆவணங்களின் கோப்பு திருடப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறியதாவது, “இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், அதன்பின்னர் இனந்தெரியாத நபர்கள் துசித ஹல்லொலுவ மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
முந்தைய சம்பவ பின்னணி
துசித ஹல்லொலுவ சமீபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இவர், ஜனாதிபதி கிரீஸ் நாட்டில் பாரிய முதலீடு செய்ததாகக் கூறியிருந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த உரையாடல்களுக்குப் பிறகு, ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் வெளியிட்டதாக துசித ஹல்லொலுவ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில், ஜனாதிபதியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த வழியாக, மே 4ஆம் திகதி அதிகாரப்பூர்வ முறைப்பாடு ஒன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.