ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான விரைவான மொழிபெயர்ப்புக்கான புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த திட்டம், மொறட்டுவை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், சில தனியார் துறைகளும் இணைந்து செயல்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரத் துறை பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அவரது தகவலின்படி, இந்த மென்பொருள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தினால், சிங்களத்தில் உரையாடப்படும் உரைகள் சில விநாடிகளில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டும், தமிழில் உரையாடப்படும் உரைகள் சிங்களமாகவும் தானாகவே மாறும் திறன் கொண்டதாக இருக்குமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மென்பொருள், இரு சமூகங்களுக்கிடையிலான தகவல் தொடர்பை எளிமைப்படுத்துவதோடு, அரச மற்றும் தனியார் துறைகளின் மொழிபெயர்ப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.