நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு விரோதமாக செயல்பட்ட இரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம். எச். பைறூஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ. அஸ்பர் ஆகியோர்,
கட்சியின் அதிகாரப்பூர்வக் கோட்பாடுகளை மீறி, தவிசாளர் பதவிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளை புறக்கணித்து, முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டிணைப்பு ஏற்படுத்தி, பதவிகளுக்காக கட்சியை விலக்கி நின்றது கட்சி நெறிமுறைகளுக்கு முற்றிலுமாக எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஜூலை 3ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டதாக எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் கட்சியின் ஒழுங்குமுறை மற்றும் பொதுநல காப்பாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும், எதிர்காலத்தில் இவ்வகை மீறல்களை தடுக்க கட்சி உறுதியாக இயங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.