அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக தேவையாக இருந்த தொப்புக்குடா பிரதான வாய்க்கால் தொடர்பான புனரமைப்பு பணிகள், இப்போது நிரந்தர தீர்வை நோக்கி நகர்ந்துள்ளன. இந்தப் பணிக்காக ரூ.112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாதங்களுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
இக்கேள்வி, பிரதி சபாநாயகர் டொக்டர். றிஸ்வி சாலி தலைமையில் இன்று (11.07.2025) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்டது. அதில், இறக்காம பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்களத்தால் பராமரிக்கப்படும் தொப்புக்குடா பிரதான வாய்க்கால், அதிக மழை காலங்களில் உடைந்து நீர் வழிகின்றதால், நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு காலங்களில் தற்காலிகமாகவே சீரமைக்கப்பட்ட இவ்வாய்க்கால், மறுபடியும் முற்றாக பழுதடையும் நிலை தொடர்ந்ததால், தற்போது நிலைமையை நிரந்தரமாக கையாள, முறையான புனரமைப்பு அவசியமாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, தொப்புக்குடா வாய்க்கால் புனரமைப்புக்கான நிதி மற்றும் முடிவு கால எல்லை குறித்து உதுமாலெப்பை எம்பி கேட்டார்.
அமைச்சர் சுசில் ரணசிங்க பதிலளிக்கையில், 112 மில்லியன் ரூபாயின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 மாத காலத்திற்குள் அனைத்து புனரமைப்புப் பணிகளும் முழுமையடையும் எனவும் உறுதிபடுத்தினார்.
இந்த திட்டம், அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சி என எதிர்பார்க்கப்படுகிறது.