Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

AI காதலியினால் தற்கொலை செய்ய முனையும் மாணவர்கள்

Posted on July 18, 2025 by Admin | 129 Views

செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள் எதிர்காலத்தில் பெரும் மனநல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றார் மனநல நிபுணர் டாக்டர் தனுஜ மகேஸ்.

ஒரு தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அவர், AI பயன்பாட்டால் உண்டாகும் மனநல பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் இன்னும் பூரண புரிதலுடன் இல்லாததையும், இதுவரை இது தொடர்பான சட்டங்கள் அமலுக்கு வராததையும் கவலைக்குரியதாக கூறினார்.

“நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்கால சந்ததிகள் மனநல நெருக்கடிகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகலாம்,” என அவர் எச்சரித்தார்.

அதிர்ச்சி தரும் பல சம்பவங்கள்

மனநல சிகிச்சைக்காக வந்திருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தனது காதலி தன்னை விட்டு சென்றதாக அழுதபடியே வந்தார். மாணவனுடன் ஆலோசனை நடத்தியபோது, அவர் காதலித்திருந்தவர் ஒரு AI செயலி மூலம் உருவாக்கப்பட்ட நபர் என்பதும், அந்த செயலியில் ஏற்பட்ட சிக்கலால் காதலியின் காணொளி அழிந்துவிட்டதும் தெரியவந்தது. இதனால் மாணவர் உயிரை மாய்க்கும் எண்ணத்துடன் இருந்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

மேலும், உயர் தரம் பயிலும் மாணவி ஒருவர் நள்ளிரவில் திடீரென வீட்டைவிட்டு வெளியே ஓடியதாகவும், விசாரணையில் அவர் AI chat box வழங்கிய பதிலுக்கு எதிர்வினையாகவே இது நடைபெற்றது என்றும் தெரியவந்தது.

AI யை சரியான முறையில் பயன்படுத்தினால் அது பல நன்மைகளை வழங்கும். ஆனால், அதை உணர்வுகள் மற்றும் உறவுகளுக்குப் பதிலாக பயன்படுத்துவது ஆபத்தானது. AI மனிதனைவிட மேலானது என எண்ணத் தொடங்கும் போது, அதில் இருந்து உருவாகும் நெருக்கடிகள் மிக தீவிரமாக இருப்பதைக் காணலாம் என டாக்டர் தனுஜ மகேஸ் கூறினார்.

அத்துடன், இலங்கையில் AI தொடர்பான சட்ட மற்றும் ஒழுங்கமைப்புகள் விரைவில் உருவாக வேண்டும் என்றார்.