பொத்துவில் அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அருகே மேல் ஆடை இல்லாமல் நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொது இடையூறும், அநாகரீக நடத்தையும் காரணமாகக் கொண்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
காவல்துறையினர் தெரிவித்ததாவது,
வழக்கு விசாரணையின் போது அவரது சுய அடையாளம் காணப்பட்ட பாலினம் பெண் என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், குறித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவரின் பயண ஆவணங்களில் பாலினம் ஆண் (M) என்றும், அழைப்புப்பெயர் ‘Mr.’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நிலைமையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
உயிரியல் ரீதியாக ஆணாக இருந்தாலும், தற்போது அவர் தனது சுய அடையாளத்தை பெண்ணாக வகுத்திருப்பது முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
சம்பவம் குறித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பயணிக்கு, அநாகரீக நடத்தைக்காக இரண்டு வார சிறை, மற்றும் பொது இடையூறுக்காக ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இரண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் ஆகும்.
மேலும் விசாரணையின் போது, அவர் ஒரு அமெரிக்கப் பயணியுடன் இலங்கைக்கு வந்ததும், அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
சட்டபூர்வ ஆவணங்கள் மற்றும் உடல் அடையாளம் இடையிலான முரண்பாடுகள், திருநங்கைகள், பாலின மாற்றம் செய்தவர்கள், மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்டவர்களின் உரிமைகள் குறித்து தெளிவான சட்டங்கள் தேவைப்படுகிறது என்பதை இச் சம்பவம் புலப்படுத்துகிறது.