இலங்கை கல்வித்துறை கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கையினை பலரிடம் முன்வைத்த போதும் இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவே இவர்களுக்கான தீர்வினை வழங்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்தினசேகர அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண கல்வி சாரா உத்யோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.
இதற்கமைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். குனநாதன் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் விசேட கூட்டம் இன்று (2025.07.18) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, கல்வி அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை கல்வித்துறை கல்வி சாரா உத்தியோகத்தர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை….
கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு பல ஆண்டு காலமாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை அவர்களின் பதவி பெயர் பாடசாலை பணியாளர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றது.
மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் கீழ் தேசிய பாடசாலைகள் மற்றும் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம், வடமேல் மாகாண பாடசாலைகளில் பாடசாலை பணியாளர்கள் தரம்- 111 என்ற நியமனம் வழங்கப்பட்டு பின்னர் 10 வருட சேவையினை நிறைவு செய்தவர்களுக்கு தரம் -11 அவர்களின் பதவிகளின் பெயர்கள் பாடசாலை ஆய்வு கூட உதவியாளர், பாடசாலை நூலக உதவியாளர் ,பாடசாலை அலுவலக உதவியாளர், பாடசாலை காவலாளி என்ற பதவிப் பெயர்களுடன் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரே நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம், வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள மாகாண சபைகளில் ஒரு விதமான நடைமுறையும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் வேறு விதமான நடைமுறைகளும் அமுல்படுத்தப்பட்டு வருவதனால் நமது கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பான செயல்பாடுகளை 13 வது சரத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நமது நாட்டில் 09 மாகாணங்களுக்கு சமமாகும் முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சை இதுவரை காலமும் நடாத்தப்படாமல் உள்ளதால் கிழக்கு மாகாண கல்வி சாரா உத்யோகத்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களில் 34 பேர் பட்டதாரிகளாக உள்ளதனால் இவர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்னர் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அகில இலங்கை கல்வித்துறை கல்வி சாரா உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் ஏ.எம். ஜெமீல் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மிக நீண்ட காலமாக எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர்.
கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். குனநாதன், கிழக்கு மாகாண கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பதவிகளின் பெயர்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிப்பதாகவும், ஏனைய மாகாணங்களில் மாகாண பாடசாலைகளில் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்படும் எனவும்
பாடசாலை நூலக உதவியாளர், ஆய்வுகூட நூலக உதவியாளர் பதவி உயர்வுகள் தொடர்பாக முகாமைத்துவ சேவை பணிப்பாளரிடம் தான் அனுமதி கோரியுள்ளதாகவும் முகாமைத்துவ சேவை பணிப்பாளரின் அனுமதி கிடைத்தவுடன் இது தொடர்பாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும், பட்டதாரிகளாக உள்ள 34 கல்விசார உத்தியோகத்தர்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.குனநாதன் தெரிவித்தார்.