உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டையே அதிர்ச்சியடைய வைத்த குண்டுத்தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும் தகவல்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தேசிய புலனாய்வுத் துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இம் முடிவை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளதுடன், அவரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் நிலந்த ஜெயவர்தன் தனது கடமையை புறக்கணித்ததுடன், குற்றவியல் பிரிவுகளுக்குட்பட்ட செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்கமைய அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், நிலந்த ஜெயவர்தன்மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டுமென பொலிஸ் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.