சமீப காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு நிகழ்ச்சி இன்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச். பௌமி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், டெங்கு நோயை ஏற்படுத்தும் அடீஸ் வகை நுளம்புகளின் வாழ்விடங்கள், அதன் இனப்பெருக்கம், நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
“டெங்கு ஒரு முக்கியமான அறிகுறி இல்லாத பெரும் ஆபத்தான நோயாகும். எளிமையான சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலமும், தண்ணீர் தேங்கி நிற்காதபடி வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும் நாம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்,” என்றார் அவர்.
மாணவர்களுக்கு தங்களது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் சுகாதாரத்தை பேணுவதன் அவசியம், நுளம்பினை உருவாக்கும் சூழ்நிலைகளை முற்றிலும் நீக்குவது போன்ற முக்கிய அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியின் மாணவர்களுக்கு சுகாதாரப் பரிசோதகர் பௌமி எளிய உதாரணங்களுடன் தெளிவாக விளக்கினார்.
இந்த நிகழ்ச்சி, பாடசாலை மாணவர்களில் சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்ததோடு, டெங்கு போன்ற நோய்களை தடுக்கும் விழிப்புணர்வாகவும் அமைந்திருந்தது.