அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வின் போது, புறத்தோட்டம் வட்டாரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுவேன் என்றும், அதற்கான முழுமையான உறுதிமொழியையும் வழங்குவதாகவும் பிரதேச சபை உறுப்பினர் எ.சி. நியாஸ் தெரிவித்தார்.
பிரதேச சபையின் புதிய தவிசாளர் எ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய அவர், “புறத்தோட்டம், ஆலங்குளம், சம்புநகர், மீனோடைக்கட்டு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல கிராமங்களை உள்ளடக்கிய எனது வட்டாரம், விவசாயப் பெருக்கத்தோடு இயற்கைக்கு இணையாக விளங்கும் பகுதி. ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்த வட்டாரம் திட்டமிடல்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது” எனக்கூறினார்.
அண்மையில் மாகாண சபையால் வழங்கப்பட்ட நிதியிலும் புறத்தோட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக தவிசாளர் உறுதியாகவே எதிர்காலத்தில் இவ்வாறான பாகுபாடுகள் நடைபெறாது என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“என் வட்டார மக்களின் தேவைகளுக்காக அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். குழுக்களை வாக்கெடுப்பு மூலமாக தேர்வு செய்ய வேண்டாம், திறமை வாய்ந்தவர்களை சேர்க்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர்களுக்கும், கட்சியின் தேசியத் தலைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், தனது தந்தையும், சகோதரனும் சமூக சேவையில் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். “இப்பதவியை பெற்ற இந்த தருணத்தில், என்னால் முடிந்த அளவிற்கு என் மக்கள் மற்றும் பிரதேசத்துக்காக நேர்த்தியாக செயலாற்றுவேன்” என உறுதியளித்தார்.