Top News
| கருங்கொடி மண்ணின் இளம் கால்பந்து வீரர்கள் சர்வதேச போட்டியில் சாதனை | | பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி | | 25 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை |
Aug 12, 2025

உதுமாலெப்பை எம்பியின் முயற்சியால் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையைத் தீர்க்க விசேட கூட்டம்

Posted on July 25, 2025 by Admin | 244 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசமான கல்முனை பிரதேச செயலக பிரிவு தொடர்பாக நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சினைக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் நேற்று (24.07.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இச் சந்திப்பில் உரையாற்றிய உதுமாலெப்பை, கல்முனை பிரதேச செயலக பிரிவைச் சுற்றிய பிரச்சினைகள் தீர்வுக்காக முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது,


கல்முனை பிரதேசத்திற்கு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்குள்ளது . எனவே இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

“முஸ்லிம், தமிழ் சமூகங்கள் கலந்து வாழும் இந்த பிரதேசத்தில், தமிழ் அரசியல்வாதி ஒருவர் இனவாத கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கிறது. இது அரசியல் நோக்கத்துக்காகவே செய்யப்படுகிறது. நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.”

கல்முனை பிரதேசத்தில் சுமார் 70% காணிகள் முஸ்லிம் சமூகத்தினருக்கு சொந்தமானவை எனவும், அதனை கருத்தில் கொண்டு முஸ்லிம், தமிழ் சமூக தலைவர்கள் புரிந்துணர்வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் இரு சமூகமும் பிணைப்புடன் வாழ்ந்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இதே கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில், “முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றாகச் சந்தித்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு காண்பது நல்லது” என்றார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் அபயரத்ன….

வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, கல்முனை பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்தப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் திரு ஆலோக பண்டாரவுக்கு பணித்துள்ளார்.

இந்த விசேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், கல்முனை பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இச்சந்திப்பு, இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வழியில் நிரந்தர தீர்வை நோக்கி நகரும் ஒரு முக்கிய கட்டமாகும்.