நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அவர் உரையாற்றியபோது, “இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளை பின்பற்றாததால், அவற்றின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன,” எனக் கூறினார்.
மேலும், 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு 2,039 மருந்தக உரிமப்பதிவுகள் புதுப்பிக்க வேண்டிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் 1,820 மருந்தகங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், 219 மருந்தகங்களின் உரிமங்கள் தற்போது தற்காலிகமாக புதுப்பிக்கப்படவில்லை. இதில் முக்கிய காரணமாக 137 மருந்தகங்களில் முழுநேர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாமை காட்டப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு மட்டுமே உரிமங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் வழிகாட்டுதலின் அடிப்படையில் மருந்தகங்கள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.