அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் மற்றும் பொறியியலாளர் மர்ஹூம் என்.ரீ சிறாஜுடீன் அவர்களின் மறைவுச் செய்தி தனது மனதைக் கணம் ஒன்றில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக அக்கரைப்பற்று பிரதி மேயர் யூ.எல். உவைஸ் தெரிவித்துள்ளார்.
தாம் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேரடியாக இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ள அவர், “சிறாஜுடீன் அவர்கள் என் அரசியல் பயணத்திலும், நமது விடுதலைப் போராட்டத்திலும் துணிச்சலுடன் பங்களித்தவர். கௌரவ மேயர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களோடு இணைந்து, ஊருக்காக பல சேவைகளை செய்த தலைசிறந்த சமூக பணியாளராக இவர் விளங்கினார்” என்று குறிப்பிட்டார்.
மேலும், சிறாஜுடீன் அவர்கள் மூத்த தலைவரும் மக்கள் நம்பிக்கையாளர் என கொண்டாடப்படும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
“அக்கரைப்பற்று அமைப்பாளராக அதாஉல்லா, மத்திய குழுவின் செயலாளராக நானும், மேற்கு வட்டார அமைப்பாளராக சிறாஜுடீனும் சேர்ந்து செயல்பட்ட காலம் நினைவில் வருகிறது. அவர் பெரும் சமாதான மனத்துடன், விவேகபூர்வமாக அரசியல் பணி செய்தார்,” என கூறியுள்ளார்.
மரணமென்றாலும் உயிர்கள் இறைவனிடம் திரும்புகின்றன என்பதைக் குறிப்பிட்ட உவைஸ், சிறாஜுடீனின் இரு உலக வெற்றியையும் அல்லாஹ் வழங்க வேண்டும் என பிரார்த்தித்தார்.
சிறாஜுடீன் குடும்பத்தினர், மனைவி, பிள்ளைகள் உள்ளிட்டோர் அனைவருக்கும் இறைவன் பொறுமையும், நல்வாழ்வையும் வழங்கிட வேண்டுகிறேன் என அவரது உருக்கமான அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.