சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணைப்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்தாலோசனைகள் நடைபெற்றதுடன், பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
முக்கியமாக, அல் மர்ஜான் பாடசாலை முன்பாக உள்ள அரச நிலத்தை நிரந்தரமாக இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சம்மாந்துறை பகுதியில் நீடித்து வரும் நீர்ப்பாசன சிக்கல்கள், வீதி புனரமைப்புகள், மின் விளக்குத் திட்டங்கள், சம்மாந்துறை வைத்தியசாலை நில விவகாரம், அல் அமீர் பாடசாலை மற்றும் கல்வி வலய பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி தேவைகள் ஆகியவை பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது.
வீரமுனை இந்துமயானம் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றுடன், விவசாயக் காணிகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் பொது உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பாகவும் தீர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த முக்கியக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸித், கே. கோடிஸ்வரன், முன்னாள் எம்.பிக்கள் எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எம்.எம். நெளசாத் ஆகியோர்கள் உள்ளிட்ட பிரதேச நிர்வாக அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.